WhatsApp
WhatsApp

முத்தமிடுபவர்களும் அழுத்தவர்களும்

Jun 05, 2026 By Hephzibah Stephen

வேதப்பகுதி சங் 32:1-11

யூதாஸ் மற்றும் பேதுரு இருவரும் இயேசுவின் சீடர்கள். இருவரும் அவருடன் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து சென்றனர், அவரது போதனைகளைக் கேட்டனர், அவரது அற்புதங்களைக் கண்டனர், அவருடன் நெருங்கிய உறவை அனுபவித்தனர். ஆயினும்கூட, அவருடைய பூமிக்குரிய ஊழியத்தின் இருண்ட இரவில், இருவரும் தங்கள் எஜமானரை விட்டுவிட்டார்கள். யூதாஸ் ஒரு முத்தத்துடன் இயேசுவைக் காட்டிக் கொடுத்தான், பேதுருவோ, மூன்று முறை இயேசுவை மறுதலித்தான்.  இயேசுவை அறியவில்லை என்று சத்தியம் செய்தான், இருப்பினும் அவர்களின் முடிவுகள் மிகவும் வித்தியாசமாக இருந்தன.  

அதுவே நமக்கு இன்றைய பாடம்.  

யூதாஸ் வருத்தப்பட்டான் ஆனால் மனந்திரும்பவில்லை. அவன்  தனது துரோகத்தின் விளைவுகளைப் பார்த்தபோது, அவன் குற்ற உணர்ச்சியால் அதிகமாக வேதனைப்பட்டான். அவன் அந்த முப்பது வெள்ளிக்காசுகளைத் திருப்பிக் கொடுத்து "குற்றமில்லாத இரத்தத்தைக் காட்டிக்கொடுத்து பாவஞ்செய்தேன்" என்று அறிக்கையிட்டான் (மத்தேயு 27:4). ஆனாலும், இரக்கத்திற்காக கிறிஸ்துவிடம் திரும்புவதற்குப் பதிலாக, அவன் விரக்தியுடன் வேறெப்பக்கம்  திரும்பினான். அவனது தீர்மானம் அவனுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்ள வழிவகுத்தது.

கர்த்தரை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன் என்று தைரியமாக அறிவித்த பிறகு, பேதுரு அவரை மூன்று முறை மறுதலித்தான்.  சேவல் கூவியபின்பு, இயேசு பேதுருவைப் பார்த்தபோது, கர்த்தருடைய வார்த்தைகளை நினைவுகூர்ந்து, மனம் கசந்து அழுதான் (லூக்கா 22:62). பேதுரு வெறுமனே வருத்தப்படவில்லை; அவன் மனந்திரும்பினான். அவனது கண்ணீர் கடவுளின் முன் உடைந்த உள்ளத்தையும் நொறுங்குண்ட  இதயத்தையும் வெளிப்படுத்தியது.

யூதாசின் குற்றவுணர்வு அவனை விரக்தியிலும் அழிவிலும் தள்ளினது.  அதே நேரத்தில் பேதுருவின் உடைந்த உள்ளம் அவனை கிறிஸ்துவிடம் வழி நடத்தியது..  நம்முடைய வாழ்க்கையில் நம்மை வரையறுப்பது நமது தோல்விகள் அல்ல, அவற்றுக்கு நாம் எப்படி பதில் செய்கிறோம் என்பதே.  உடைந்த உள்ளமுள்ள மனிதர்களை தேவன் உருவாக்க முடியும்.

பேதுருவின் தோல்வி அவனை பணியில் இருந்து தகுதி நீக்கம் செய்யவில்லை (சங். 51:17).  உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, இயேசு தனது ஆடுகளின் பராமரிப்பை அவனிடம் ஒப்படைத்தார் (யோவான் 21:15-17)

கிருபையின் பாதை எப்போதும் "மனவருத்தம், மனந்திரும்புதல், மறுசீரமைப்பு" போன்ற காரியங்களுடன் இருக்கும்.   தன்னிடம் தாழ்மையோடும் மனந்திரும்புதலோடும் வருபவர்களை ஆண்டவர்  புறக்கணிப்பதில்லை.   அவரது கிருபைக்கு எந்த தோல்வியும் மிகப் பெரியது அல்ல.   பேதுருவை மீட்டெடுத்த அதே ஆண்டவர் இன்று நம்மையும் மீட்டெடுக்க முடியும்.

என் நண்பரே, நீங்கள் விழுந்திருந்தால், குற்ற உணர்ச்சியில் சிக்கிக் கொள்ளாதீர்கள். உங்கள் தோல்வியை இயேசுவிடம் கொண்டு வாருங்கள். அவர் உங்களை மீட்டெடுத்து, உங்கள் தோல்விகளை தனது கிருபையின் சாட்சியாக மாற்றுவார்.

ஜெபம்:-  பரலோகத் தகப்பனே, எங்கள் தோல்விகளை விட உம்முடைய கிருபை பெரியது என்பதற்கு நன்றி.   வார்த்தைகளாலோ, எண்ணங்களாலோ, செயல்களாலோ நாங்கள் உம்மை மறுதலித்த காலங்களை எங்களுக்கு மன்னியும்.  பாவத்தின் மீது வெற்றி கொண்டு உம்முடைய ஐக்கியத்தில் தொடர்ந்து நிலைத்திருக்க உதவும். ஆமென்!


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *