அவரது பிரசன்னம்
வேதப்பகுதி : யாத்திராகமம் 33:1-16
வாழ்க்கையின் பாதைகள் மென்மையாக இருக்காது. பயணம் நீண்டதாகவும் சோர்வாகவும் இருக்கும் நேரங்கள் உண்டு. அந்நேரங்களில் நாம் தனியாக நடந்துசெல்கிறோமோ என்ற கலக்கம் நமக்கு உண்டாகிறது. சில நேரங்களில், சுமைகள் நாம் தாங்கக்கூடியதை விட கனமாக இருப்பதாக உணர்கின்றோம். இருப்பினும்அத்தகைய தனிமையான பள்ளத்தாக்குகளின் அனுபவங்களிலும் கூட, கடவுள் நம்முடன் நடந்து செல்கிறார். அவர் நமது சோர்வடைந்த ஆன்மாக்களைபலப்படுத்துகிறார், நம்மை வழிநடத்துகிறார், மேலும் அவரது பிரசன்னம் அவரது பிள்ளைகளான நம்மை ஒருபோதும் கைவிடாது என்பதை நினைவூட்டுகிறார்.
கானான் தேசத்திற்குள் இஸ்ரவேல் மக்களைக் கொண்டுவருவதற்கான பணியை கடவுள் மோசேக்கு நியமித்திருந்தார். செல்லும் பாதை அறியப்படாததாகவும், பலஆபத்துகளால் நிறைந்ததாகவும் இருந்தது. எனவே, சீனாய் மலையை விட்டுச் புறப்படுவதற்கு முன், மோசே தன்னுடன் செல்ல ஆண்டவரின் பிரசன்னத்தைக் கேட்டார். இஸ்ரவேலுடன் ஒரு தூதனை அனுப்புவதாக கடவுள் முன்பு வாக்குறுதி அளித்திருந்தார். இப்பொழுது மோசே தேவனை நோக்கி, “உம்முடைய பிரசன்னம் எங்களுடன்வராவிட்டால், எங்களை இவ்விடத்திலிருந்து புறப்படப்பண்ணாதேயும் என்றார்” (யாத். 33:15). மோசேயின் வேண்டுதலுக்கு கடவுள் பதிலளித்தார்.
உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களுக்கும் கடவுளின் பிரசன்னத்தின் ஆசீர்வாதத்திற்கும் உள்ள வித்தியாசத்தை மோசே புரிந்து கொண்டிருந்தார். கடவுள் நம்முடன்இருந்தால், நாம் ஒரு சேனைக்குள் பாய்ந்து ஓடலாம் என்றும் ஒரு சுவரை தாண்டி குதிக்கலாம் என்று சங்கீதக்காரன் கூறுகிறார் (சங்கீதம் 18:29) மோசே இதைஅறிந்திருந்தார், எனவே அவர் தன்னுடன் செல்லும்படிக்கு கடவுளின் பிரசன்னத்தை கேட்டார்.
இயேசு நம்முடைய தோழராக நம்முடன் இருக்கும்போது வாழ்க்கையின் இடையூறுகளை சமாளிக்க முடியும். சிரமங்கள் இல்லாத ஒரு பாதையை வேதம் நமக்குக்கூறவில்லை. கடினமான பாதைகளின் வழியாக செல்லும்போது கடவுள் நம் விசுவாசத்தை ஆழப்படுத்துகிறார், மேலும் நம்மை அவரிடம் கிட்டிசேர்க்கிறார். எனவேஉயிர்த்தெழுந்த இறைவன் ஒவ்வொரு அடியிலும் நம்முடன் நடப்பதாக உறுதியளிக்கிறார். எம்மாவு சாலையில் அவர் சீடர்களுடன் இணைந்ததைப் போலவே, வாழ்க்கையின் கொந்தளிப்பு, துக்கம் மற்றும் துயரங்கள் மத்தியில் ஆண்டவர் நம்முடன் இணைகிறார். நிச்சயமற்ற தன்மை மற்றும் நமது ஏமாற்றங்களுக்கு மத்தியில்அவர் நம்மோடு இணைகிறார்.
என் நண்பரே, மோசேயைப் போலவே, நாம் நாள் தொடங்குவதற்கு முன்பும் எந்த காரியத்தையும் தொடங்குவதற்கு முன்பும் அவருடைய பிரசன்னத்திற்காக ஜெபிக்ககற்றுக்கொள்ள வேண்டும். தேவைகளை கேட்பதற்கு முன், அவருடைய பிரசன்னத்தைக் கேளுங்கள். நீங்கள் கடவுளிடம் நன்மைகள் அல்லது ஆசீர்வாதங்களைக்கேட்பதற்கு முன், அவரது,சமூகத்தைக் கேளுங்கள். இது இன்று நமக்கு ஒரு பாடம். புதிய நாள், வாரம் அல்லது மாதத்தைத் தொடங்குவதற்கு முன், அவருடையபிரசன்னத்தைக் கேளுங்கள். இயேசு நமக்குப் பதிலாக மரித்த ஓர் இரட்சகர் மட்டுமல்ல. அவர் உயிர்த்தெழுந்து இன்று நம்முடன் நடந்து செல்லும்ஆண்டவராயிருக்கிறார்.
ஜெபம்:- கர்த்தராகிய இயேசுவே, எப்போதும் என்னுடன் இருப்பேன் என்று வாக்களித்ததற்கு நன்றி. வேதத்தை வாசித்து, தியானித்து, ஜெபம் செய்வதின் மூலம், உம்முடைய பிரசன்னத்தை தேட உதவி செய்யும். ஆமென்!
Leave a comment
Your email address will not be published. Required fields are marked *
