WhatsApp
WhatsApp

யார் பெரியவர்?

May 02, 2026 By Hephzibah Stephen

வேதப்பகுதி லூக்கா 22:24-39

 

இயேசு தனது சீடர்களுடன் பஸ்கா ஆசாரிக்கும்படி நடந்து செல்லும்போது, தங்களில் எவன் பெரியவன் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டானது (லூக்கா 22:24)  இயேசு சிலுவையை எதிர்நோக்கிக் கொண்டிருந்த போது, அவருடைய சீடர்கள் தங்களது பதவி, கௌரவம், அந்தஸ்து ஆகியவற்றைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தனர்.

 

இயேசு உலகிற்காக தனது உயிரைக் கொடுக்கத் தயாராகிக் கொண்டிருந்த போதிலும், சீடர்கள் உலகப்பிரகாரமாகவே சிந்தித்துக் கொண்டிருந்தனர்.  மேன்மையைப் பற்றி அவர்கள் புரிந்து கொண்டது அதிகாரம், அங்கீகாரம் மற்றும் ஆளுகை போன்ற உலகத்தின் காரியங்களால் வரையறுக்கப்பட்டிருந்தது.  ஆனால் இயேசுவோ மகத்துவத்தை வேறு விதமாக வரையறுக்க விருந்தார்.

 

பஸ்கா ஆசாரிப்பின் போது, இயேசு முற்றிலும் எதிர்பாராத ஒன்றைச் செய்தார்.  

 

அவர் ஒரு துணியை எடுத்து, தம்முடைய சீடர்களின் கால்களைக் கழுவத் தொடங்கினார் (யோவான் 13:4-5).  அக்கால கலாச்சாரத்தில், கால்களைக் கழுவுவது கடைநிலை வேலைக்காரனின் பணியாக இருந்தது.  இயேசு, பெரியவன் சிறியவனைப் போலவும், தலைவன் பணிவிடைக்காரனைப் போலவும் இருக்கக் வேண்டும் என்றும் உண்மையான மேன்மை மனத்தாழ்மையின் வழியே என்று போதித்தார் (லூக்கா 22:27).  

 

வாழ்க்கையில் முன்னேறவும், அங்கீகாரம் பெறவும், நமது முக்கியத்துவத்தை நிரூபிக்கவும் உலகம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.  ஆனால் இயேசு நமக்கு தாழ்மையாக இருப்பதையும், சேவை செய்யவும், தியாகத்தோடு நேசிக்கவும் கற்றுக்கொடுக்கிறார்.   சிலுவை இந்த மனத்தாழ்மையின் வெளிப்பாடாகும்.  இயேசு உலகப்பிரகாரமாக மேன்மையைக் கோரவில்லை.  மாறாக, அவர் தன்னை மற்றவர்களுக்காக முழுமையாக அர்ப்பணித்தார்.  உலகின் பார்வையில் பலவீனமாகத் தோன்றிய காரியம் மீட்பின் மிகப்பெரிய செயலாக மாறியது.

 

சில நேரங்களில் நாம் வெளிப்படையாக, "யார் பெரியவர்?" என்று கேட்காமல் இருக்கலாம். ஆனால் இன்னமும் அந்தஸ்தையும், அதிகாரத்தையும் நாடுபவர்களாகவே இருக்கிறோம்.  இயேசு இன்று நம்மை தாழ்மையுடன் கூடிய அன்பின் பாதை என்னும் வித்தியாசமான பாதைக்கு வழிநடத்துகிறார். கடவுளுடைய ராஜ்யத்தில் உண்மையான மேன்மை மற்றவர்களுக்கு மேலே இருப்பது அல்ல, ஆனால் மற்றவர்களுக்கு சேவை செய்வதில் காணப்படுகிறது.  இது மனத்தாழ்மை, தியாகம் மற்றும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிதல் ஆகியவற்றில் காணப்படுகிறது.

 

என் நண்பரே,  நாம் இயேசுவைப் பின்பற்றும்போது, நமது பெருமையையும் அகந்தையையும் ஒதுக்கி வைத்து, தாழ்மையான சேவையைத் தழுவிக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்.  கடவுளின் ராஜ்யத்தில், மிகப் பெரியவர்கள் சேவை செய்பவர்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்!

 

ஜெபம்:-  கர்த்தராகிய இயேசுவே, சிலுவையின் மனத்தாழ்மையை எனக்குக் கற்பித்து, உம்மைப்போல் வாழ எனக்கு உதவுங்கள்.  என் பெருமையை மன்னித்து, தாழ்மையான இதயத்தை எனக்குக் கொடுங்கள்.  என் வாழ்க்கை எப்போதும் உங்கள் அன்பு, கருணை மற்றும் தாழ்மை ஆகியவற்றை பிரதிபலிக்கட்டும்.  ஆமென்.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *