WhatsApp
WhatsApp

பூனைகளும் நாய்களும்

Mar 12, 2026 By Hephzibah Stephen

வேதப்பகுதி : லூக்கா 18:9-14 

 

பூனைக்கும் நாய்க்கும் என்ன வித்தியாசம்?  ஒரு போதகர் பூனைக்கும் நாய்க்கும் உள்ள வித்தியாசம் பற்றி வேறு வித கண்ணோட்டத்தோடு பேசினார். 

 

பூனைகளும் நாய்களும்  தங்களை குறித்து எப்படிப் நினைக்கின்றன என்பதே வித்தியாசத்தை காட்டுகிறது என்றார் அவர். ஒரு மனிதன் தன்  நாய்க்கு உணவளிக்கும்போது, அல்லது அதை நேசிக்கும்போது, நாய் அந்த மனிதன் கடவுளாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறது. ஆனால் மனிதன் அப்படியே பூனையை கவனித்து, அதற்கு உணவளித்து, நேசிக்கும்போது, பூனை தான் கடவுளாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறது! அதுதான் வித்தியாசம் என்று கூறினார்.  

 

இந்த உவமை நமக்கு ஒரு முக்கியமான ஆன்மீக உண்மையை நினைவூட்டுகிறது. 

 

சில நேரங்களில் மக்கள் கதையில் உள்ள 'பூனை' போல இருக்கிறார்கள், தேவனிடத்தில் இருந்து ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளும் போது  அவை தங்களுடைய நல்வாழ்க்கை, நற்காரியங்கள், ஒழுக்கம் அவைகளின் பலன் என்று நினைக்கிறார்கள். அவர்கள் அந்த ஆசீர்வாதங்களுக்கு மிகவும் தகுதி அற்றவர்கள்,  ஆனாலும் கடவுள் தனது கிருபையினாலே அவர்களுடைய தகுதியை விட அதிகமாக ஆசீர்வதித்துள்ளார் என்று ஒருபோதும் எண்ணுவதில்லை.  

 

நாம் அனுபவிக்கும் ஆசீர்வாதம், நமது இரட்சிப்பு, நம் திறமைகள் மற்றும் கடவுளுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்புகள் கூட கர்த்தரிடமிருந்து வருகிறது. ஆனால் நாம் அப்படி நினையாமல், நாம் ஆசீர்வாதங்களுக்குத் தகுதியானவர்கள் என்பதால் தான் கடவுள் நம்மை ஆசீர்வதித்துள்ளார் என்று நினைக்கத் தொடங்குகிறோம். நிச்சயமாகவே, உபவாசமும், ஜெபமும் முக்கியமான ஒழுங்கு முறைகள். அவைகள் கடவுளுடனான நம் உறவை ஆழப்படுத்துகின்றன, மேலும் அவரைப் பின்பற்றுவதற்கு நம் இதயங்களை வடிவமைக்கின்றன. ஆனால், கடவுள் நம் தகுதியின் பேரில் நம்மை ஆசிர்வதிப்பதில்லை. நமது நீதி அழுக்கான கந்தை போல் உள்ளது. கடவுளின் ஆசீர்வாதங்கள் அவருடைய கிருபையிலிருந்து வருகின்றன என்பதை வேதம் மீண்டும் மீண்டும் நமக்கு நினைவூட்டுகிறது.

 

"கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;  ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல" என்று எபேசியர் 2:8-9 ல் வாசிக்கிறோம்.  இரட்சிப்பே கிருபையின் பரிசு என்றால், அன்றாடம் நாம் பெறும் ஆசீர்வாதங்கள் இன்னும் எவ்வளவு அதிகம்! ஆரோக்கியம், ஏற்பாடு, சேவை செய்வதற்கான வாய்ப்புகள் மற்றும் ஆன்மீக வளர்ச்சி அனைத்தும் அன்பான தகப்பனிடமிருந்து கிடைக்கும் பரிசுகளாகும். இந்த உண்மையை நாம் அங்கீகரிக்கும்போது, நமது அணுகுமுறை மாறும். பெருமையாக இருப்பதற்குப் பதிலாக, நன்றியுடனும் பணிவுடனும் ஜீவிப்போம். அப்பொழுது நாம் சங்கீதக்காரனுடன் சேர்ந்து "என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி, அவர் சகல உபகாரங்களை மறவாதே" என்று கூறுவோம்.   (சங்கீதம் 103:2).  

 

இன்று நாம் பதிலளிக்க வேண்டிய கேள்வி, "கடவுளின் ஆசீர்வாதங்களுக்காக நான் அவருக்கு நன்றி கூறுகிறேனா, அல்லது நான் அவற்றுக்கு தகுதியானவன் என்று எண்ணுகிறேனா" என்பதாகும்.  கடவுளின் ஆசீர்வாதங்களுக்கு சரியான பதில், நன்றியுள்ள வழிபாடு. நம்மிடம் உள்ள அனைத்தும் அவரது கிருபை மற்றும் அன்பிலிருந்து வந்தவையே.

 

என் நண்பரே, இன்று நீங்கள் கடவுளின் ஆசீர்வாதங்களை அனுபவிக்கும்போது, நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியது. கடவுள் கிருபையுள்ளவர் என்பதே. அதனால் நாம் அவருக்கு முன்பாக தாழ்மையுடனும் நன்றியுடனும் உண்மையுடனும் வாழ உந்தப்பட வேண்டும்.

 

ஜெபம்:- ஆண்டவரே, என் இதயத்தால் தாழ்மையை தாரும். என்னிடம் உள்ள ஒவ்வொரு ஆசீர்வாதமும் உம்முடைய கிருபையால் கிடைத்த பரிசு என்பதை நினைவில் கொள்ள எனக்கு உதவி செய்யும்.  என் வாழ்க்கை எப்போதும் நன்றியோடும் துதிகளோடும் இருக்க உதவுவீராக. ஆமென்.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *