வந்து பாருங்கள்
வேதப்பகுதி : யோவான் 4:19-30
ஒருமுறை, நானும் என் கணவரும் மறைதிரு.வி.பி. ஐசக் அவர்கள் நடத்தும் சென்னை, அமைந்தகரையில் உள்ள கிறிஸ்து தேவாலயத்திற்குச் சென்றோம். பலிபீடத்தின் மேல் "வந்து பாருங்கள்" என்று எழுதப்பட்ட வார்த்தைகள் பார்க்க எனக்கு சவாலாக இருந்தது. எந்தப் பலிபீடத்திற்கும் மேலேயும் இந்த வார்த்தைகளை நான் பார்த்ததில்லை!
'போய் செய்' என்பது எவ்வளவு முக்கியமோ, 'வந்து பாருங்கள்' என்பதும் அவ்வளவு முக்கியமானது (மத்தேயு 28:19-20).
'வந்து பாருங்கள்' என்பது நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு நமது மறுரூபமாக்கப்பட்ட வாழ்க்கையை பார்க்க ஒரு சவாலான அழைப்பாகும். சில நேரங்களில் பல இடங்களுக்குச் சென்று தேவ வசனத்தை கூறுவது மக்களை அழைத்து நமது தனிப்பட்ட வாழ்க்கையைப் காண்பிப்பதைவிட எளிதாய் இருக்கிறது! அதுவே இந்த அழைப்பை பல மடங்கு சக்திவாய்ந்ததாக ஆக்குகிறது!
இயேசுவின் வார்த்தைகள் சமாரியப் பெண்ணைத் தொட்டபோது, அவள் தனது பாத்திரத்தைக் கிணற்றில் விட்டுவிட்டு, கிராம மக்களிடம் ஓடி, அவர்களை 'வந்து பாருங்கள்' என்று அழைத்தாள். சாட்சிகொடுத்த ஸ்திரீயினிமித்தம் அந்த ஊரிலுள்ள அநேக சமாரியர் இயேசுவை விசுவாசித்தார்கள் என்று வேதாகமம் சொல்லுகிறது (யோவான் 4:39). வேதாகமம் முழுவதிலும் உள்ள மிக சக்திவாய்ந்த அழைப்புகளில் இதுவும் ஒன்றாகும்.
இயேசு நாசரேத்திலிருந்து வந்ததாக நாத்தான்வேல் கேள்விப்பட்டபோது, "நாசரேத்திலிருந்து ஏதாவது நன்மை வர முடியுமா?" என்றார். (யோவான் 1:46) நாத்தான்வேல் உண்மையிலேயே இயேசுவைச் சந்தித்தால், அவரது சந்தேகங்கள் முற்றிலும் விளக்கப்படும் என்று பிலிப்பு நம்பினார். பிலிப்பு நாத்தானியேலுடன் வாக்குவாதம் செய்யவில்லை, ஆனால் வெறுமனே, "வந்து பாருங்கள்" என்று கூறுகிறார்.
"வந்து பாருங்கள்" என்பது கேள்வியிலிருந்து அர்ப்பணிப்புக்கு மாறுவதற்கான அழைப்பாகும். நமக்கு இன்று கொடுக்கப்படும் சவால் இதுவே! "வந்து பாருங்கள்" என்பது கிறிஸ்தவ சாட்சியின் இதயம்.
உலகை நம்ப வைப்பதற்காக நாம் அழைக்கப்படவில்லை, ஆனால் உலகுக்கு கிறிஸ்துவை அறிவிக்கவே அழைக்கப்பட்டிருக்கிறோம். மறுரூபமாக்கப்பட்டநம் வாழ்க்கையை பார்க்க அழைக்க வேண்டும். அவரது கிருபை எவ்வாறு நம் வாழ்வில் வேலை செய்கிறது என்பதையும் நம் வாழ்வில் காணப்படும் அசையாத நம்பிக்கை, அமைதி மற்றும் மகிழ்ச்சியை காண வந்து பாருங்கள் என்று அழைக்க வேண்டும்.
என் நண்பரே, நமது வாழ்க்கையை ஆராய்வதற்காக கடவுள் நமக்கு மற்றொரு லெந்து காலத்தை வழங்கியுள்ளார். உங்கள் சந்தேகங்கள், கேள்விகள், சோர்வு ஆகியவற்றுடன் வாருங்கள். இயேசுவிடம் வருபவர்கள் ஒருபோதும் மாறாமல் திரும்புவதில்லை.
ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் மற்றவர்களிடம் "என் வாழ்க்கையை வந்து பாருங்கள்" என்று தைரியமாகச் சொல்வதற்கு வேண்டிய கிருபையை தாருங்கள். சாட்சியாக இருக்கவும் எல்லா இடங்களிலும் உமது கிரியைகளை அறிவிக்கவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்!
Leave a comment
Your email address will not be published. Required fields are marked *
