WhatsApp
WhatsApp

சோதனை இதயத்தை தட்டும் போது

Apr 18, 2026 By Hephzibah Stephen

வேதபகுதி - யோவான் 13:1-30

சாத்தான் எப்போதும் நம்மை ஒரே மாதிரியாக அணுகுவதில்லை என்பதை வேதாகமம் வெளிப்படுத்துகிறது. 1 பேதுரு 5:8 ல், சாத்தான் யாரையாவது விழுங்கலாமா என்று அலைகிற ஒரு கர்ஜிக்கும் சிங்கம் போல் விவரிக்கப்படுகிறான். ஆதியாகமம் 3 இல், அவன் ஏமாற்றும் ஒரு பாம்பாக தோன்றுகிறான். 2 கொரிந்தியர் 11:14 ல், அவன் ஒளியின் தூதனாக, கவர்ச்சிகரமானவனாக, ஆவிக்குரியவனாகவும் தோன்றுகிறான்.  

கடவுளிடமிருந்து மக்களைத் திசைதிருப்ப சாத்தான் அச்சுறுத்தல், மோசடி போன்ற பல்வேறு உத்திகளைப் பயன்படுத்துகிறான் என்பதை இந்த உருவகங்கள் நமக்கு நினைவூட்டுகின்றன.  

யோவானின் நற்செய்தி நூல் யூதாஸ் இஸ்காரியோத்துடைய வாழ்க்கையிலிருந்து ஒரு பாடத்தை கற்று தருகிறது.   யோவான் 13:2 ல், அவரைக் காட்டிக்கொடுக்க யூதாசுடைய இதயத்தில் பிசாசு ஒரு எண்ணத்தை வைத்ததாக நாம் வாசிக்கிறோம். இது ஒரு விதைக்கப்பட்ட சிந்தனை, யூதாசின் இதயத்தின் கதவைத் தட்டும் படியான ஒரு சோதனை. இந்த நேரத்தில், யூதாஸ் அதை  நிராகரிக்க வாய்ப்பு இருந்தது. அவன் அந்த எண்ணத்தை நிராகரித்து, அதை அறிக்கையிட்டு, கிறிஸ்துவிடம் திரும்பிச் சென்றிருக்கலாம். ஆனால், அவன் அப்படி செய்யவில்லை.

பின்னர் நிலைமை மோசமடைந்தது, யோவான் 13:27 ல் "சாத்தான் அவனுக்குள் பிரவேசித்தான்" என்று வேதவாக்கியம் கூறுகிறது. ஒரு ஆலோசனையாகத் தொடங்கியது ஆதிக்கமாக மாறியது. யூதாஸ் இந்த சோதனையை தனது இதயத்தில் நிலைத்திருக்க அனுமதித்தான். அதனுடைய பரிதாபமான விளைவு அவன் பின்பற்றிய இயேசுவை காட்டிக்கொடுத்த துரோகமாகும்.  

யூதாசின் கதை இன்று நமக்கு ஒரு முக்கியமான ஆவிக்குரிய பாடத்தைக் கற்பிக்கிறது.

சோதனை இறுதி வீழ்ச்சி அல்ல; அதற்கான பதில்தான் விளைவை தீர்மானிக்கிறது. ஒரு வஞ்சகமான பாம்பு, அச்சுறுத்தும் சிங்கம் அல்லது ஒளியின் தூதன் போன்ற எதிரி முதலில் கிசுகிசுக்கும்போது, வேண்டாம் என்று தள்ளிவிட நமக்கு வாய்ப்பு உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலைகளை எதிர்க்கவும், விலகிச் செல்லவும், இயேசுவின் மீது நம் கண்களை நிலைநிறுத்தவும் வேண்டிய தருணங்களை கடவுள் நமக்கு எப்பொழுதும் வழங்குகிறார்.

ஒவ்வொரு மனிதனும் "தன் இஷ்டத்தினால் இழுக்கப்பட்டு, மயங்கும்போது" சோதிக்கப்படுகிறான் என்பதை யாக்கோபு நமக்கு நினைவூட்டுகிறார் (யாக் 1:14). சிந்தனை ஊக்கமளிக்கப்பட்டால், அது வலுவாக வளரும். ஆனால் அது நிராகரிக்கப்பட்டு கடவுளின் சத்தியத்தால் மாற்றப்பட்டால், அது அதன் சக்தியை இழக்கிறது.  எனவே, நாம் நம் இதயங்களை கவனமாக பாதுகாக்க வேண்டும்.  

எதிரி கர்ஜிக்கும் போது, நாம் விசுவாசத்தில் உறுதியாக நிற்க வேண்டும். அவன் பாம்பைப் போல கிசுகிசுக்கும்போது, நாம் கடவுளின் வார்த்தையுடன் பதிலளிக்க வேண்டும். அவன் ஒளியின் தூதனாக தோன்றும்போது, நாம் வேதத்தின் ஒத்தாசையுடன் அதைச் சோதிக்கவேண்டும்.

என் நண்பரே!  யூதாஸ் கதை வெறும் வரலாறாக பதிவு செய்யப்படவில்லை; இது ஒரு எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வுக்கான அழைப்பு. சோதனை நம் இதயக் கதவை தட்டலாம், ஆனால் நாம் அதை உள்ளே அனுமதிக்கக் கூடாது. நம்முடைய இதயங்கள் கிறிஸ்துவுக்கு நெருக்கமாக இருக்கும்போது, எதிரிக்கு கதவு மூடப்பட்டிருக்கும்.

ஜெபம்:-  கர்த்தராகிய இயேசுவே, பிசாசுக்கு இடமில்லாதபடிக்கு உம்முடைய வார்த்தையால் என் இருதயத்தை நிரப்ப எனக்கு உதவுங்கள். ஆமென்!


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *